23 Jun | செய்தி. பேரா சட்டமன்றத் தலைவராக கணேசன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆணையின்பேரில், தாம் தாக்கப்பட்டு, தவறாக தடுத்து வைக்கப்பட்டதற்காக இழப்பீடும் செலவினத் தொகையும் வழங்கும்படி கோரி சிவக்குமார் தொடுத்த வழக்கை கடந்தாண்டு செப்டம்பர் 8ஆம் திகதி ஈப்போ உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த மே 7ஆம் திகதி கூட்டத்தின்போது, பேராக் சட்டமன்றத் தலைவர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாதென உயர் நீதிமன்றத் தலைவர் அசஹார் மொகமட் அறிவித்தார்.
“எந்தவொரு சட்டமன்றக் கூட்டத்தின் தகுதி குறித்தும் எந்த நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்ப முடியாது” என்று கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 72(1) குறிப்பிடுவதாக அவர் கூறினார்.
மேலும் சட்டமன்றக் கூட்டத்தின்போது அவைத் தலைவரின் பதவி நீக்கம் அல்லது நியமனம் தொடர்பாக எழும் விவகாரங்களை சட்டமன்றமே பரிசீலித்து, விவாதித்து, தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் அல்லவென்றும் அசஹார் கூறினார்.
அதோடு, சர்ச்சைக்குரிய ஒரு நடவடிக்கையையும் மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டுள்ளது – அந்த சர்சைக்குரிய சட்டமன்றக் கூட்டம் மீதான பதிவேட்டை (Hansard) ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும்படி பெரோஸ் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி குழாம் ஏற்றுக் கொண்டது.
உயர் நீதிமன்றத்தில் அந்த பதிவேடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொதுவாக, கூடுதல் ஆதாரத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதில்லை. இவை, பெரும்பாலும் விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் செய்யப்படும். இருப்பினும், பதிவேடு முன்னர் கிடைக்கவில்லை என்றும், இப்போதுதான் கிடைத்தது என்றும் பெரோஸ் கூறினார்.
சான்: கணேசனுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?
இவ்வேளையில், கணேசன் – சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாததால் – அவைத் தலைவர் என்ற முறையில் சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா என்று தமது வாதத் தொகுப்பில், சான் வினவினார்.
“சட்டமன்ற நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என மெய்ப்பிக்கப்பட்டால்தான் கணேசனுக்கு விலக்கு அளிக்கப்படும். சட்டமன்றம் கூடுவதற்கு முன்னர்தான், பேரா ராஜா மூடாவால் அவர் ‘தேர்ந்தெடுக்கப்பட்டதாக’ கூறப்படுகிறது.
“அந்த வகையில், அவரது தேர்வு, கேள்விக்குரியது. ஆதலால் குற்றச்சாட்டு விவகாரம் முழு விசாரணைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதை தொடக்கத்திலேயே தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என்று சான் வாதிட்டார்.
கடந்தாண்டு மே 7ஆம் திகதி, சட்டமன்றத்தை கூட்டுவதற்கான பிரகடனம் காலை 10.30மணியளவில் செய்யப்பட்டது. அதன் பின், தேமு சட்டமனறப்பேராளர்கள், புதிய அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கூடினர். அரச உரை பிற்பகல் மணி 2.30அளவில் நிகழ்த்தப்பட்டது.
இது வழக்கமான நடைமுறைகளுக்கு முரணாக உள்ளது. அதாவது, அரச உரைக்குப் பின்னர்தான் சட்டமன்றம் கூடும். ஆக, இந்த ஒரே காரணத்துக்காக, கணேசன், சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று சான் வாதிடுகிறார்.
“தாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கத் தவறினால், கணேசன் சிவில் வழக்கையும் குற்றவியல் சட்டத்தின் கீழ், தாக்குதல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள வேண்டும்.
அவைத் தலைவர் என்ற முறையில் கணேசனுக்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அவரது செயல்கள் (அந்த தாக்குதல்) சட்டமன்ற நடவடிக்கைகளில் ஒரு பகுதி என்பதை அவர் மெய்ப்பிக்க வேண்டும்.
“அவை நடவடிக்கைகளில், எதிரிகளை அடிப்பதும் அடங்குமா,” என்று சான் வினவினார்.
பெரோஸ்: ‘கணேசன் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்’
கணேசன் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடும் நாடாளுமன்ற பதிவேட்டை பெரொஸ் சமர்ப்பித்தார். மேலும் பேராக் சட்டமன்றச் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாயும் அவர் கூறினார்.
இவ்வேளையில் மேல் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, கூட்டரசு நீதிமன்றத்திடம் முறையீடு செய்யப்போவதாக சான் கூறினார்.